பூமணியின் அஞ்ஞாடி குறித்து

த செயகுமார்

நல்லில் , 41- மங்கைமனவாள பெரிய தெரு, பறக்கை, கன்னியா குமரி மாவட்டம்- 629603 # 979 033 0773

பூமணியின் அஞ்ஞாடி குறித்து

“ அடேயப்பா! “ ன்னு நாம சொல்லும்படி பூமணி “ “ஸ் ….. அஞ்ஞாடி” ன்னு சொல்லி மலைப்பூட்டுகிறார்

எதை முதலில் குறிப்பிடுவது. நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போது அறியாமலேயே கன்னத்தில் வழிந்து கண்ணாடி நனைத்து இறங்கிய கண்ணீர்த் துளிகளைச் சொல்வதா? பின்னிரவில் நீண்ட அமைதியில் ஒரு பைத்தியக்காரனைப்போல் சத்தமிட்டுச் சிரித்த செய்தியை விவரிக்கவா? பிரதிகள் சில வேளைகளில் மலரும் நினைவுகளாய் மாறி மேல் தொடர முடியாமல் புத்தகத்தை மூடி அந்நினைவுகளில் ஆழ்ந்து போவதைப் பேசுவதா? கடந்த நூற்றண்டின் மொழி வலிமையை முன் நிறுத்திய அந்த ஆளுமையைக் கண்டு சொல்வதா? நாட்டுபுறங்களில் மள்ளர்களின் பேச்சு பழக்கதில் அள்ளித் தெளித்த சொலவடைகளில் மலைத்து நின்றதைச் சொல்வதா? எதைச் சொல்வது?

இது தான் பூமணியின் செய்தி என்று அறுதியிட்டுக் கூற முடியாதவாறு பிறந்த ஜாதி, கடைப்பிடிக்கும் மதம், படித்த படிப்பு, செய்யும் தொழில், நிகழ்த்தும் வன்முறை, நோக்கும் கனவு, அளிக்கும் புனைவு. பழகும் கதைகள் அனைத்திலும் வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒழிந்து கிடப்பதை வெளிக் கொணர்வதாய் நாவல் நீள்கிறது. மக்கள் கூட்டத்தின் வெறுமையும், தனிமனிதனின் அருமையும் 22 படலங்களிலும் தொடர்கிறது.

இளவயது நாட்களில் அம்மா கூறிய செய்தி இது.
பாளையைங்கோட்டையில காலேஜ் ஆஸ்ட்ல்ல இருந்த தன்மகனை கண்குளிரப் பாத்துப்புட்டு அம்மாத சோத்துக்கட்டணுமும் கட்டிக்கிட்டு வரலாம்னு கண்டாங்கி கழற்றி வேட்டியும் துண்டும் போட்டுப்போன தங்கராசுவாதிரி, மகன் கூடபடிக்கிற பையங்ககிட்ட ‘ ‘எங்க வீட்டு வேலைக்காரன்னு’ சொன்னதைக் கேட்டு தறி ஆலையில நாண்டுக்கிட்டு நின்னு செத்துப்போனாரு” . இது தானே பொம்மக்காளும் எடுத்த முடிவு.

அது 1975 ம் வருடம் எஸ் எஸ் எல் சி பிள்ளைகளுக்கு இரவுப்பாடம் நடத்தும் பள்ளி வெள்ளாளன்விளையில் இருந்தது. ஒரு நாள் ராப்பள்ளி முடிந்ததும், பள்ளி மைதானத்தில் அலைந்து திரிந்த கழுதை மேல் நண்பர்கள் ஏற்றி விட, வேகமாய்ச் சுமந்து சென்று பள்ளிக்கூட கருக்குமட்டை வேலியில் உதறி விட்டு கழுதை ஒடி விட, முதுகில் சிராய்ப்பும், மறுநாள் வீட்டிலும் வாத்தியரிடமும் பிரம்படி பட்ட நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு தானே கால ஒடிச்சுகிட்ட ஆண்டி மற்றும் பல்லத் தொலைச்சுப்புட்ட மாரியின் கதை”

பின்னும் ஒரு நாளில் வட்டன்விளைப் பாதையில் விடிலி போட்டிருந்த போது வெள்ளைப் பன்றி ஒன்றை வளர்த்து வந்த வெள்ளையாநாடான், எங்கள் வீட்டிற்கு வந்து “ ஏ கிட்னன் மொவனே, கொஞ்சம் அடுப்புக் குப்ப தாடே “ ன்னு கேட்டு அரைக்கலயம் அளவுக்கு எடுத்துச் சென்ற போது தெரியாமலிருந்த விஷயம், அஞ்ஞாடி கோவிந்தன், அறுத்துப் போட்ட இடத்தில் சாம்பலை அப்பி கருவ முள்ளாள் தைத்த போது தெரிந்து கொண்டேன். அம்மாடி ! 40 ஆண்டுகள் ஆயிருக்கு எனக்கு, இந்த அனுபவத்தின் நினைவுகளை அசைபோட்டு அசைபோட்டு மகிழ்ந்ததை எப்படிச் சொல்வது?

போலிக் கலச்சாரத்தையும் , சாதிக் கட்டுப்பாட்டையும் கேலிக்குள்ளாக்கும் ஆண்டாள்களும், ஆழ்வார்சாமிகளும் எங்கும் எல்லா நாட்டு நாவல்களிலும் வலம் வருபவர்கள் தான். ஆனால் மகளின் முகத்தில் புதுக்களை கண்டு மெச்சும் பெத்தப்போடு நரயன நாயக்கரும், “ வாழப் பிற்ந்தவளே என் வளர்பிறையே கண்ணுறங்கு” ன்னு தாலாட்டுப் பாடும் வேலாயியும் தனியானவர்கள். இவர்களைப் போன்ற துணைருந்தால் எவ்வளவு தற்கொலைகளும் கொலைகளும் தடுக்கப்பட்டிருக்கும். நினைக்கையில் மனம் வேரில் பழுத்த பலாச்சுளையாய் இனிக்கிறது.

இவ்வாறு பல நிகழ்வுகள் வாசகனின் சொந்த அனுபவத்தின் தொகுப்பாய் கண்முன் விரியும். குறிப்பாக தெக்கத்திச்சீமைக் காரணாய் இருந்தால் கட்டாயம் கண்ணில் நீர் வழியும்.

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மள்ளர்கள் – கீழ் வெண்மணி தொடர்ந்து புளியங்குடி, போடி கொடியங்குளம் பின்னர் பரமக்குடியிலும் பட்ட காயங்கள், பெற்ற வலிகள் வருங்காலத்தில் பூமணியின் எழுத்துலகக் கருவாகும் என்பதற்கு அச்சாரமாகத்தான் நாடார்கள் தொடர்புடைய கழுகுமலை, சிவகாசி கலவரம் மற்றும் குமரி மாவட்டத் தோள் சீலை போராட்டங்கள் அச்சு பிசகாமல் ஆவணப்படுத்தப்பட்டு காட்சியாய் விரிகிறது.

இன்னும் 18ம் நூரற்றாண்டு குடும்பமார்கள் வாழ்வியல் வரலாறு கலிங்கலில் தொடங்கி பட்டணம் தொடர்ந்து மற்றும் கலிங்கலில் இடுகுழி மேலிருந்தும் அருமையாக, துல்லியமாக வரையபட்டுள்ளது.

மகிழ்ச்சி, அழுகை, வீரம், பெருந்தன்மை, நட்பு, நக்கல், புதிர், பொறமை, கோபம் என வினைகளை வார்த்தையில் வடிக்கும் கலைஞனை பாராட்ட வார்த்தையின்றித் தவித்தபோது
“ வார்த்தை தேவனாய் இருந்தது”
அல்லது
“ படைப்பதனால் என் பேர் இறைவன்”

நெல்லை மாவட்டத்துக்காரன் போடுற சொலவடைகள்ல சொக்கிப்போகலாம்பாங்க. வெள்ளிவிழா காணும் தூத்துக்குடி மாவட்டத்துக்காரர் என்றாலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துக்காரர் என்பதை எப்படி அறிவது?

இப்படித்தான்.

எல்லோரும் அறிந்த பழமொழிகள் தவிர்த்து நாவலெங்கும் விரசிக்கிடக்கும் சொலவடைகளின் தொகுப்பை ஒரு நயத்திற்காக நிரலிட்டிருக்கிறேன்

• கைகண்ட சிருக்கிக்கி கண்ணீர் ஒன்னுதான் கொரைச்சலாக்கும்.
• ஒழக்கு நெல்லுக்கு ஒழைக்கப் போனேன், பதக்கு நெல்ல பண்ணி
தின்னுருச்சே.
• முந்தில இருக்கிற வண்டவாளத்த சந்தீல அவுத்து வுட்டுருவேன்.
• திங்கறதுக்கு தவுடு இல்லையாம் தங்கச் சரப்புளி தொங்கு தொங்குன்னு
ஆடுதாம்.
• ஊராளுத ராசாவுக்கு பேலுறதுக்கு எடமில்லயாம்.
• முத்துப் போல ஒத்தப் புள்ள பொத்திப் பொத்தி வளத்தாளாம்.
• ஒடயவன் இல்லாத சீல ஒரு மொழம் கட்ட.
• நனஞ்ச கிளடி வந்தா காஞ்ச வெறகுக்குத்தான் சேதாரம்.
• கள்ளி பெருத்தென்ன சிறுத்தென்ன காயுண்டா எணலுண்டா.
• பொந்தடி தவள மாறி புள்ள பெத்து போட்டிருக்கா.
• கொதி பொறுக்காத குருண குதியாளம் போடுற காலம்.
• சோத்துப் பான ஒடஞ்சா மாத்துப் பான இல்லாத உசிரு.
• கெடக்கிறது குட்டிச் சொவரு கெனாக்கான்றது மச்சி வீடா?
• கூலிக்கு அறுத்தாலும் குருணிக்கு அறுக்கலாம்.
• அய்யோ கூத்து அத கொஞ்சம் பீத்து.
• பிஞ்சத் திருகி வெயில்ல எறிஞ்சா வெம்பிப் போகாதா?
• அறுத்தெறிஞ்ச பூசணித்துண்டா கொற நிலா கோணிக் கெடக்குது.
• சொன்னத வுட்டுட்டுச் சொறையப் புடுங்காத.
• ஆடு நெனைக்கிற இடத்துல கூடு கவுத்த முடியுமா?
• நாறக் கருவாட்ட பூன மொறைக்கிற மாதிரி பாக்காத.
• ஊர ஒழக்காலா அளப்பான் நாட்ட நாழியால அளப்பான்.
• கடலு வத்தி கருவாடு திங்கணும்னு நெனச்ச கொக்கு உடலு வத்திச்
செத்ததாம்.
• கரும்பு கட்டோட இருந்தா எறும்பு தானெவரும்.
• அழிஞ்ச பிஞ்சயில குருத மேஞ்சாயென்ன கழுத மேஞ்சாயென்ன ?
• சோளம் நட்டாப்ல கம்பு கெட்டாப்ல இருக்கணும்.
• தாது வருசப் பஞ்சம் தரமட்டமாக்காம வுடாது.
• பொன்னுறுகக் காஞ்சி மண்ணுறுகப் பேயணும்.
• ஆனைக்கு வடிக்கிற வீட்டில பூனைக்குச் சொறில்லாமப் போச்சா?
• நாரை பறக்கிற கொளம் கோர கூட மொளைக்காம கெடக்குது.
• கொட்டாரம் பழசானாலும் குருவிக்குப் பஞ்சமா?
• வெள்ளத்து மீனு மாதிரி விர்ருன்னு ஏறி வாரானே.
• அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்லே உமின்னு ஊதிப் பாப்பாருமில்லே.
• ஒலக்க தேஞ்சி உளிப்புடி ஆன கதை.
• இன்னிக்கு எலை அறுக்கிரவன் நாளைக்கு குலை அறுக்க மாட்டானா?
• அச்சானி இல்லத வண்டி முச்சாணும் ஓடாது.
• வைய வைய வைரக்கட்ட திட்டத் திட்டத் தேக்கங்கட்ட.
• அரணக்கயித்துல கோத்த தாயத்து போல.
• இச்சிப் பழத்த பிச்சிப் பாத்தா தெரியும் எத்தன புளு உள்ள இருக்குன்னு.
• ஈரங் காயிர வரைக்கும் குண்டில மண் இருக்கத்தான் செய்யும்.
• ஆறு போவது கிழக்கு, அரசன் சொல்வதே வழக்கு.
• நோஞ்ச மாட்ல ஈ ஒட்னமாதிரி.
• சீத்த குருவி கொழுத்தா செடியில நிக்காதாம்.
• இண்டஞ் செடிக்குள் தலய விட்டு முழிக்கிற பொழப்பு.
• காதுல கட்டெறும்பு கடிபட்ட கழுதக் குட்டியா காலம் கண்டமானிக்கு ஒடுது.
• செறகு முத்தி குருவி யாயிற்றா அதுக வாயி வயித்தத் தான் பாக்கும்.
• அணிலு கொப்புலதான் ஆம கெணத்துல தான்.
• கண்ணுக்கு கண்ணாம்பட்ட காத தூரமா?
• வேலிக்குப் போட்ட முள்ளு காலுக்கு வெனையாச்சு.
• கெடா பின்வாங்கறது பாச்சலுக்குன்னு தெரியாதா?
• அரிசி சிந்தினா அள்ளிரலாம் , வார்த்த சிந்தினா வார முடியுமா?
• நெருப்பாத்துல மயிர்ப்பாலம் கட்டுற மகராசங்க.
• அட்டமத்து சனியன் புடிச்சு புட்டத்துத் துணியையும் உறுவிருச்சு.
• ஆனயக் காணோம்னு ஆப்பைகுள்ள தேடுற ஆக்கங்கெட்ட பய.
• தென்ன மரத்துல தேள் கொட்டி பன மரத்துல பதவள கெட்ன கதை.
• சண்டக்காரனுக்கு தப்புனது சட்டக்காரனுக்கு இறையாவும்.
• பகல்ல பசுமாடு தெரியாதவனுக்கு இருட்டுக்குள்ள எருமமாடு எங்க
தெரியும்.
• தகப்பன் வெட்ன கினறுன்னாப்ல தலகீழா பாயலாமா?
• வாளக் கருவாட்டப் போல வசிய மருந்து உண்டுமா?
• ஒழவடிக்கயில ஒறங்கறவன இந்த ஒலகத்துல பாக்கமுடியுமா?

• செல்லச் சிறுக்கி புருஷன் செவ்வாக் கெழம செத்தானாம். வீடு வெறிச்னு
போகும்னு வெள்ளிக் கெழம எடுத்தாளாம்.
• செல்லிக்கு செரங்கு, சிறுக்கிக்கு அரையப்பு, பாக்க வந்த பாதகத்திக்குப்
பக்கப்பொளவாம்.
• நாட்டுக்கு நல்ல தொர வந்தாலும் தோட்டிக்கு சொம எறங்காது.
• அடுத்த ஊட்டு கல்யாணமே , ஏன் அழுகிற கோவணமே?
• கொத்தன் மோத்ரம் கோவுரத்லேயும் இருக்கும்.
• வாழ்ந்து கெட்டவன் வறுகோட்டுக்குக் கூட ஆக மாட்டான்.
• அரிசிப் பல்லுக் காரி அவுசாரி, மாட்டுப் பல்லுக் காரி மகராசி.
• இறுகினாக் களி எழகினாக் கூழு.
• சூத்துல கெட்டத் துணி இல்லாதவனுக்கு கூத்தியா ரெண்டு பேராம்.
• சீல இல்லன்னு சின்னத்தாயி வீட்டுக்குப் போனாளாம், அந்தத் தாயி
ஒலப் பாயக் கட்டிக்கிட்டு ஓடி வந்தாளாம்.
• மலையே உழுந்தாலும் தலதான் தாங்கணும்.
• நீருள்ள மட்டும்தான் மீன் துள்ளும்.
• எடங்குடுத்தா மடங் கேக்கிற எடுப்பெடுத்த நாயி.
• தொடையில இருக்கிற புண்ண கடையில காட்டுனா அசிங்கம்.
• பூ விரிஞ்சி கெட்டதாம் வாய் இளிஞ்சி கெட்டதாம்.
• குப்பையில மக்கப் போறதுக்கு கணக்கெதுக்கு.
• போக்கத்தவனுக்கு போறதெல்லாம் வழி.
• இன்னிக்கு சங்கடம் நாளைக்கு சந்தோசம்.
• ஆடு கடிக்கும்னு இடையன் உறி மேல ஏறி ஒழிஞ்சானாம்.
• ஆகாசத்துல பறக்க வழி சொல்றேன் என்ன ஆத்துக்கு அந்தப் பக்கம்
தூக்கி உடுன்னானாம்.
• பசி இல்லாம இருக்க வரம் தாரேன் கொஞ்சம் சோறுபோடு தாயி !
• பேறு காலத் தீர்மானம் எத்தன நாளைக்கு.
• நடக்கயில நாடெல்லாம் உறவு , படுத்துக்கிட்டா பாய்கூட பகைதான்.
• ஒடம்பு கெடக்குது மடத்துக்குள்ள கோவணம் கெடக்குது கெணத்துக்குள்ள.

சொக்கத்தானே செய்கிறது.

விடை பெறலாமா?

எப்படி?

இப்படி.

வாரேன்…… இவனே…!